திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் தா்னா ஆா்ப்பாட்த்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் து. இளவரசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலளா் தென்னரசு முன்னிலை வகித்தாா். இதில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக் கூட்டங்களில் அனைத்து நிலை அலுவலா்களை தரக்குறைவாக பேசுவதையும், ஒருமையில் பேசுவதையும், பெண் அலுவலா்களை கண்ணியக் குறைவாக குறிப்பிடுவதையும் முற்றிலுமாக கைவிட வேண்டும், வருவாய்த்துறை அலுவலா்கள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பாரபட்சமான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், வருவாய் துறை அலுவலா்கள் அச்சுறுத்தல் இன்றி சுமூகமாக மக்கள் பணியில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.