மார்த்தாண்டம்: குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க மனு
மார்த்தாண்டம் பேரை காலனி பகுதி மக்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: - தமிழக அரசின் உத்தரவின் படி பாகோடு பேரூராட்சிக்குட்பட்ட பேரை காலனி பகுதியில் 65 வருடங்களுக்கு முன்னே பனையோலை சொசைட்டி மூலம் இலவசமாக வீடுகள் வழங்கப்பட்டு அதில் நாங்கள் வசித்து வருகிறோம். வீடுகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 2018 வரை வீட்டு வரி செலுத்தி வந்துள்ளோம். அதற்கு பிறகு நாங்கள் வீட்டு வரி செலுத்தும் பொழுது வீட்டு வரி கட்ட சம்மதிக்கவில்லை. என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு பதிலும் தரவில்லை. எங்கள் வீட்டுக்கு எல்லா ஆவணங்களும் அரசு தந்திருக்கிறது. மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, ஆதார் அட்டை, மற்றும் ரேசன் அட்டை அரசால் வழங்கப்பட்டது. 2018 லிருந்து வீட்டு வரி செலுத்த அனுமதி தர வேண்டும் எனவும், எங்கள் கைவசம் இருக்கும் இடத்திற்கு பட்டா வழங்குவதுடன் பாழடைந்து கிடக்கும் எங்கள் வீடுகளை சீரமைக்க அரசு எங்களுக்கு நிதி உதவி செய்து தரவேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.