தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றால் குண்டாஸ்.. கலெக்டர் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கஞ்சா, குட்கா போன்றவை விற்பனை செய்யும் கடைகள் சீல் வைக்கப்படுகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்படுகிறது. இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக நேற்று (28 ம் தேதி) சோதனை மேற்கொண்டார். கடைகளில் பார்வையிட்ட அவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று கடையில் இருந்தவர்களிடம் அறிவுரை வழங்கினார். குறிப்பாக சிறுவர்களுக்கு புகையிலை, குட்கா, கூல் லிப் விற்பது தண்டனைக்குரிய குற்றம் மற்றும் புகார் அளிக்க வேண்டி தொலைபேசி எண்கள் தொடர்பான விபரங்களுடன் அட்டை ஒன்றையும் கடைகளில் வழங்கினார். மேலும் அவர் கூறுகையில் புகையிலை பொருட்கள் விற்றதாக 3 முறைக்கு மேல் நிருபிக்கப்பட்டால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.