அருமனை அருகே முதப்பன்கோடு பகுதியை சேர்ந்தவர் சிறிய புஷ்பம் (86). அப்பகுதியில் உள்ள லூர்து அன்னை ஆலயத்தில் உபதேசியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உடலை ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தில் எந்தவித கட்டுமான பணிகளும் செய்யக்கூடாது என கோர்ட்டு தற்காலிக உத்தரவு வழங்கி இருப்பதாக அங்கு அடக்கம் செய்ய கூடாது என அவர்கள் கூறினார்கள்.
ஆனால் ஆலயத்தில் மற்றொரு பிரிவினர் உடல் அடக்கத்திற்காக குழி தோண்டினர். அதனால் இருதரப்பினருக்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், அருமனை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தக்கலை டிஎஸ்பி நல்ல சிவம், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடம் சென்றனர். தொடர்ந்து விளவங்கோடு தாசில்தார் ஜூலியன், துணை தாசில்தார் மேத்தியு ஜோஷ் ஆகியோரும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை அடுத்து மூதாட்டியின் உடலை அதே இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டு, தொடர்ந்து இன்று 21-ம் தேதி அடக்கம் நடந்தது.