செங்கல்பட்டில் அனுமதி இல்லாத கடைகள் அகற்ற உத்தரவு
செங்கல்பட்டு தசரா திருவிழாவில் அனுமதி இல்லாமல் உள்ள கடைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவிற்கு அடுத்த இடத்தில் செங்கல்பட்டில் கொண்டாடப்படும் தசரா திருவிழா மிக பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. செங்கல்பட்டு பழைய ஜி. எஸ். டி. சாலையில் ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி , 10 நாட்கள் நடைபெறும் தசரா விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், 137ம் ஆண்டு தசரா விழா 2ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி தசரா நடைபெறும் சின்னக்கடை வீதியில் பல்வேறு விளையாட்டு சாதனங்கள், ராட்சத ராட்டினங்கள், உணவு கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், சிறு கடைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள ராட்சத ராட்டிணங்களுக்கு முறையான அனுமதி பெறாததால் அவைகளை இயக்க அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர். இதனால் இரண்டு நாட்களாக தசரா திருவிழாவிற்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையில் மூன்றாவது நாளாக சில ராட்டிணங்கள் மற்றும் கடைகள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இங்கு பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த இராட்டினங்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் இராட்டிணங்களை அகற்றினர்.