மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நாளை (ஞாயிற்றுகிழமை) தொடங்கி ஒரு மாதம் நடைபெறுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலில் ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால சிற்பகலை சின்னங்கள் உள்ளன.
இந்த புராதன சின்னங்களை வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் நாள்தோறும் அதிகளவில் வந்து கண்டு மகிழ்கின்றனர். இந்திய நாட்டு பயணியர் ஆண்டு முழுவதும் வருகின்றனர். சர்வதேச சுற்றுலா பயணிகளை பொறுத்த வரையில் அக்டோபர் மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை அதிகளவில் வருகின்றனர். இந்த குறிப்பிட்ட மாதங்கள் வெளிநாட்டு பயணியர் வரும் சீசன் மாதங்களாகும். குறிப்பாக சுற்றுலாவிற்கு திரளும் சர்வதேச பயணியர் நம் நாட்டு கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய விழாக்கள் உள்ளிட்டவை குறித்து அறிய ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்பயணியருக்காக தமிழக சுற்றுலாத்துறை டிசம்பர் ஜனவரியில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடத்துகிறது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஒரு மாத காலத்திற்கு நடத்தப்படும் விழாவில் தினசரி மாலை 6. 30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நாட்டியங்கள், கரகம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் நடத்தப்படுகின்றன.