ஒரகடத்தில் ஒரே நாளில் 7 டூ --- வீலர்கள் திருட்டு
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடத்தில் லாரி, பேருந்து தயாரிக்கும் பிரபல தனியார் தொழிற்சாலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தொழிற்சாலைக்கு பணிக்கு வரும் ஒப்பந்த ஊழியர்கள், தங்களின் இருசக்கர வாகனங்களை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள்கோவில் சர்வீஸ் சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இந்த நிலையில், சில மாதங்களாக இரவு நேரங்களில் சர்வீஸ் சாலையில் நிறுத்தும் வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த 16ம் தேதி இரவு, ஒரே நாளில், 7 இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நான்கு மாதங்களில் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என, குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும், எஸ். பி. , நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நுண்ணறிவு பிரிவு போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மூடி மறைப்பதால், நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, ஒரகடம் பகுதியில் அதிகரித்து வரும் இருசக்கர வாகன திருட்டை கட்டுப்படுத்த, காஞ்சிபுரம் மாவட்ட எஸ். பி. , நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.