
மறைமலை நகர் காவல் நிலைய எல்லையில் சோதனை சாவடி திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் காவல் நிலையம் தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தின் எல்லையான ஜி. எஸ். டி. , சாலையில் தைலாவரம், பரனுார் பகுதிகள், சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார் சாலையில் திருக்கச்சூர் பெரியார் நகர் பகுதிகளில் அடிக்கடி மொபைல் போன் பறிப்பு, செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்தப் பகுதியில் தங்கி ஒரகடம் பகுதியில் வேலைக்கு சென்று வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அச்சம் அடைந்து இருந்தனர். இதையடுத்து மறைமலை நகர் போலீசார் சார்பில் பெரியார் நகர், தைலாவரம் உள்ளிட்ட எல்லைப்பகுதியில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட உள்ளனர்.