நாமக்கல்: சிறுமி பாலியல் தொல்லை வழக்கு; மேலும் ஒரு வாலிபர் கைது
சிறுமியை பாலியல் தொல்லை செய்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி சித்தம்பூண்டியை சேர்ந்தவர் ரமேஷ் (44). ரிக்வண்டி தொழிலாளி. இவருக்கும், ஈரோடு பகுதியை சேர்ந்த 36 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அப்பெண்ணுக்கு 16 வயதுள்ள மகள் உள்ளார். ரமேஷ், அப்பெண்ணின் வீட்டிற்கு செல்லும்போது, மகளிடம் பழகி, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை அப்பெண்ணும், அவரது கணவரும் கண்டிக்கவில்லை. மாறாக சிறுமியின் தந்தையும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் சிலரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, கடந்த அக்டோபர் மாதம் சிறுமியின் தந்தை, தாயின் கள்ளக்காதலன் ரமேஷ், கடலூர் மாவட்டம் விருதாசலத்தை சேர்ந்த வாசு மகன் வினோத்குமார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஈரோடு வைராபாளையம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த பாலு மகன் கட்டிட தொழிலாளியான சுதாகரன் (27) என்பவரை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.