ஈரோடு சின்னசடையம்பாளையம் பகுதியில் நேற்றிரவு , சுமார் 5 அடி நீளமுள்ள இந்தியன் கோப்ரா எனப்படும் கோதுமை நாகப் பாம்பு ஒன்று சாலையில் ஊர்ந்து செல்வதை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், பாம்பு பிடி வீரரான யுவராஜிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த பாம்பானது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் (பைக்) ஒன்றுக்குள் புகுந்து பதுங்கியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பிடி வீரர் யுவராஜ், அந்த இருசக்கர வாகனத்தில் பாம்பை தேடியுள்ளார். சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு, அந்த இருசக்கர வாகனத்தின் சீட்டிற்கு அடியில் பாம்பு பதுங்கியிருந்ததை கண்டறிந்து, பின்னர் அந்த பாம்பை யுவராஜ் லாவகமாக பிடித்து வெளியில் எடுத்து, அதனை பத்திரமாக கொண்டு சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பைக்குக்குள் பதுங்கியிருந்த பாம்பை லாகமாக பிடித்த யுவராஜை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.