சரக்கு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்: 2 வாலிபர்கள் பலி
அந்தியூரை அடுத்த பர்கூர் அருகே உள்ள தாளக்கரையைச் சேர்ந்தவர் கொம்பன். இவருடைய மகன் கார்த்திக் வயது 18. பர்கூர் குன்றி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி இவருடைய மகன் சந்துரு வயது 18. இவர்கள் இரண்டு பேரும் டீக்கடையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இரண்டு பேரும் பவானியில் இருந்து அந்தியூருக்கு நேற்று(செப்.6) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பவானியை அடுத்த தொட்டிபாளையம் தாளப்பையனூர் பனங்காட்டூர் அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சரக்கு ஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் காரணமாக அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.