மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்: ஆட்சியர் தகவல்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் இன்று (செப்.10) வெளியிட்டு உள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் அப்பாவு நகரில் உள்ள, நகராட்சி துவக்கப் பள்ளியில், 15. 09. 2024 அன்று மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. காலை 9. 15 மணிக்கு முன்பதிவு ஆரம்பமாகிறது. குரலிசைப் போட்டி, பரதநாட்டிய போட்டி, நாட்டுப்புற நடனப் போட்டி, ஓவியப்போட்டி நடைபெறும். குரலிசை போட்டியில், கர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படும். கிராமிய நடனப்போட்டியில், தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. குறுந்தகடுகள் / பென் டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி தெரிவித்துள்ளார்.