காரை திருடி விற்ற இரண்டு பேர் கைது
சிதம்பரம் அண்ணாமலை நகர் முத்தையா நகரை சேர்ந்த ஜீவஜோதி ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவர் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கார் வாங்கி விற்கும் மச்சகேந்திரன் என்பவரிடம் தவணை முறையில் சொகுசு கார் வாங்கினார். அந்த காருக்கான தவணை தொகையை சரியாக ஜீவஜோதி கட்டி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஜீவஜோதி தனது வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு சென்றார். அந்த காரை மச்சகேந்திரன் திருடிச்சென்று காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளார். இது பற்றி அறிந்த ஜீவஜோதி மச்சகேந்திரனிடம் சென்று காரை தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மச்சகேந்திரன் தனது மனைவி மகாலட்சுமி, மகள் பிரியங்கா ஆகியோருடன் சேர்ந்து ஜீவஜோதியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரியை சேர்ந்த செந்தில் பண்ருட்டியை சேர்ந்த அப்துல் மாலிக், கீரப்பாளையத்தை சேர்ந்த வாசுதேவன் ஆகியோருடன் மச்சகேந்திரன் சேர்ந்து அந்த சொகுசு காரை நாட்றாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த நகை வியாபாரியிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில் (48), அப்துல் மாலிக் (28) ஆகியோரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் மச்சகேந்திரன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.