ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு யக்ஷா எனும் பாரம்பரிய கலைத் திருவிழா கோலாகலமாக துவங்கியது. இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் மற்றும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழா நிகழ்வுகளை துவங்கி வைத்தனர். ஈஷாவில் யக்ஷா திருவிழா, நேற்று முதல் 25 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஈஷா மைய வளாகத்தின் சூர்ய குண்ட மண்டபம் முன் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சிக்கில் குருசரண் அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் அவருடன் வயலின் கலைஞர் சஞ்சீவ், மிருந்தக இசைக்கலைஞர் பரத்வாஜ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த இசை நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் கண்டு ரசித்தனர். யக்ஷா திருவிழாவில் இன்று தேசிய விருது வென்ற ஹிந்து ஸ்தானி இசைக் கலைஞர் ராகுல் தேஷ்பாண்டே அவர்களின் இசை நிகழ்ச்சியும், நாளை மீனாட்சி ஸ்ரீனிவாசன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.