சென்னை: அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; கொடியேற்றுகிறார் இபிஎஸ்
அதிமுகவின் 53-வது ஆண்டு விழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. அன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்க உள்ளார். இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக, வரும் அக். 17-ம் தேதி 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை கொண்டாடும் வகையில் அன்று காலை 10. 30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிகளில், தலைமைக்கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதேபோல், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்ட அளவில் ஆங்காங்கே கட்சி கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசி, கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கட்சி கொடியை ஏற்றவேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும் ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.