விமான சாகச நிகழ்ச்சியில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமியின் சமூக வலைதளப் பதிவில், வான் சாகச நிகழ்ச்சியில் போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும், போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு போலீஸார் போதிய அளவில் இல்லை.
இதனால் மக்கள் கடும் நெரிசலில் சிக்கி, குடிநீர்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக்கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய திமுக அரசுக்கு எனது கண்டனங்கள்.
பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் உற்சாகத்தோடு கடற்கரை நோக்கி திரண்டது மகிழ்ச்சி என்றால், அந்த மக்களின் உற்சாகத்தை, ஆர்வத்தை உணராமல் அரசு நிர்வாகம் செயலிழந்து போனதை கண்டு வருத்தம் ஏற்படுகிறது. இனி வரும்காலங்களில் அரசும், காவல்துறையும் விழிப்போடு பணியாற்ற வேண்டும்.