தவெக கட்சியின் முதல் மாநாடு அக். 27-க்கு தள்ளிவைப்பு

62பார்த்தது
விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில்,  தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி, மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம். தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம். வாகை சூடுவோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி