மத்திய அரசின் நிதியுதவியை சார்ந்துள்ள சுமார் 32, 500 ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவின் விவரம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ. 3, 586 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்பு ரூ. 2, 152 கோடியாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார். ஆனாலும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் பெறப்படவில்லை.
நமது அரசு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் என்றைக்கும் அக்கறை கொண்டுள்ளது. மத்திய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32, 500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.