தமிழகத்துக்கு நீட் விலக்கு ஏன் தேவை என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு 4 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு அளித்துள்ள பதில்கள் மூலம், நீட் விலக்கு தரவேண்டிய சூழல் மத்திய அரசுக்கு நிச்சயம் ஏற்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதுநிலை சட்டப்படிப்பில் சேர தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு, ஒதுக்கீட்டு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இன்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு குறித்து எங்களுக்கு முரண்கள் இருப்பதால்தான் நீட் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறியுள்ளோம். மேலும், தமிழக அரசின் மசோதா தமிழக மாணவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைதான்” என்றும் தெரிவித்துள்ளோம்.
இந்நிலையில், டெல்லி செல்லும்போது, பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்கு குறித்தும், தமிழகத்திற்கு உரிய மானியத் தொகைகளை முறையாக வழங்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்துவார். கூடுதலாக தராவிட்டாலும் தர வேண்டிய தொகையையாவது மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம் என அவர் தெரிவித்தார்.