
சென்னை: சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
தாக்குதல் நடத்தும் நோக்கில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றிருந்த விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 180 பேர் மீது நீலாங்கரை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சில தினங்களாக பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திராவிடர் விடுதலைக் கழகம் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்பினர் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சீமான் வீட்டை முற்றுகையிடும் நோக்கில் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி முன்னோக்கிச் சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தை அறிந்து நாம் தமிழர் கட்சியினர், சீமான் வீட்டு முன்பு அரணாக குவிந்தனர். அதில், 100-க்கும் மேற்பட்டோர் கையில் கம்பு, உருட்டுக் கட்டைகளுடன் சீமான் வீட்டருகே தாக்குதல் நடத்தும் நோக்கில் தயார் நிலையில் நின்றனர். இந்நிலையில், உருட்டுக் கட்டைகளுடன் நின்ற விவகாரம் குறித்து நீலாங்கரை போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 180 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். இந்த வழக்கில் சீமான் பெயரும் சேர்க்கப்பட்டது.