சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே. ஆர். ஸ்ரீராம் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த கே. ஆர். ஸ்ரீராமை, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி புதிய தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராமுக்கு ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, ஓய்வு பெற்ற நீதிபதி கே. என். பாஷா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பதவி வகிக்கும் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், இந்நிகழ்வில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே. என். நேரு, ரகுபதி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ. ஆர். எல். சுந்தரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.