சிவகாசி: ஏழாயிரம் கோடிக்கு பட்டாசுகள் அமோக விற்பனை....
தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை 7 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது. பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. இந்தியா நாடு முழுவதிற்கும் தேவையான பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கை வகைகளில் சுமார் 90 சதவிகிதம் அளவிற்கு இங்கு உள்ள பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு தொழிலுக்கு பல்வேறு இடையூறுகள் மற்றும் தடைகள் இருந்து வந்தாலும் சிவகாசி, விருதுநகர் சுற்று பகுதிகளில் சுமார் ஆயிரத்து மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகளில் நேரிடையாக, மறைமுகமாக சுமார் 8லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு முழுவதும் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான், தற்போது நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு அதிகளவிலான பட்டாசுகள் விற்பனையாகும். இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசியில் தயாரான பட்டாசுகள் இந்திய நாட்டு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்தாண்டு நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பட்டாசுகள் விற்பனையாகி இருப்பதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மிக நன்றாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.