தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்கத்தின் மாநாடு
திருவண்ணாமலையில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்கத்தின் மாபெரும் போராட்ட ஆயத்த 2-ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்குப் பிறகு சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கு. பாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது: 21 ஆண்டுகளாக தமிழகத்தின் நிதிச் சுமையை தாங்கிப் பிடிக்கக்கூடிய டாஸ்மாக் பணியாளா்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தை நடத்தக் கூடாது. டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 23 ஆயிரம் ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி, மாற்றுப் பணி வழங்க வேண்டும்.இவா்களுக்கு ஓய்வூதியம், வாரிசு வேலை உள்பட அரசு ஊழியா்களுக்கு இணையாக சம்பளம், சலுகைகள் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காவிட்டால் அடுத்தகட்டமாக கோரிக்கை வெல்லும் போராட்டத்தை அறிவிக்கவுள்ளோம் என்றாா்.