
ஆரணியில் புதிய அரசு பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 3 கோடி 20 லட்சத்தில் 15 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. ஒரு கோடி 70 லட்சத்தில் 8 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், சேவூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. ஒரு கோடி 70 லட்சத்தில் 8 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், சங்கீதவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. ஒரு கோடி 20 லட்சத்தில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், தேவிகாபுரம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. ஒரு கோடி 6 லட்சத்தில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் என சுமார் ரூ. 9 கோடி மதிப்பிலான கட்டடங்கள் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்து வந்தன. இந்தக் கட்டடங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார். அதே வேளையில், பள்ளிக் கட்டடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆர். சிவானந்தம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிகளில் திமுக தொகுதி பொறுப்பாளர் எஸ். எஸ். அன்பழகன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியச் செயலர்கள் துரைமாமது, எஸ். மோகன், நிர்வாகிகள் கே.டி. ராஜேந்திரன், முள்ளிப்பட்டு ரவி, ரஞ்சித், வெங்கடேசன், பொன் சேட்டு, விளை செல்வராஜ், பாலமுருகன், ஒப்பந்ததாரர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.