
ஊத்துக்குளி: 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது
திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் குப்புராஜ், பிரியதர்ஷினி மற்றும் போலீசார், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஊத்துக்குளி ரெட்டிப்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் ரெட்டிப்பாளையம் அய்யப்பமுத்தையங்காடு பகுதியில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து அங்கிருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், திருப்பூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் (வயது 36) என்பதும், ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநிலத்தவர்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.