கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் கணக்கம்பாளையம் பிரிவு கல்லாங்காடு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 23) என்பவர் தனது தோழியின் ஆபாச புகைப்படத்தை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். அதை அவரின் நண்பர்கள் அவருக்கே தெரியாமல் செல்போனில் பரிமாற்றம் செய்து பணம் கேட்டு மிரட்டினார்கள். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி புவனேஸ்வரனிடம் ஏற்பட்ட பிரச்சினையில், அவருடைய நண்பர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காந்திநகரை சேர்ந்த அங்கையர் லட்சுமணன் (36) உள்ளிட்டவர்களை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள அங்கையர் லட்சுமணனிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை நேற்று போலீசார் வழங்கினர்.