திருமுருகன்பூண்டி: கல்லூரியில் பொங்கல் விழா

80பார்த்தது
திருமுருகன்பூண்டி, ஏவிபி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய உடை அணிந்து மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்த மாணவிகள் பட்டி பொங்கலிட்டு, பொங்கல் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதன் ஒருபகுதியாக திருப்பூர் - திருமுருகன்பூண்டியிலுள்ள ஏவிபி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவை முன்னிட்டு, கல்லூரி வளாகத்திலுள்ள விநாயகர் கோவிலிலிருந்து முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக வந்த கல்லூரி மாணவிகள், கல்லூரி மைதானத்தில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டனர். தொடர்ந்து கோமாதா வழிபாடு செய்யப்பட்டு பட்டி பொங்கல் பூஜை செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து மாடு விடுதல், கரகாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளை மாணவிகள் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து ஜமாப் எனும் மேள இசைக்கு மாணவிகள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி உற்சாகமாக நடனமாடினர். தொடர்ந்து பிரபல திரைப்பட பாடல்களையும் இசைக்கவிட்டு வைப்பிங்காக நடனமாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி