திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் வழியாக இறந்தவரின் உடல் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் வஞ்சிப்பாளையம் அருகே சென்னிமலைகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 54 வயதான இவர் புற்றுநோய் காரணமாக நேற்று (டிசம்பர் 31) மரணமடைந்தார்.
சென்னிமலைகவுண்டனூர், பகுதியில் இருந்து வஞ்சிபாளையம் செல்ல நான்கு கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அப்பகுதி மக்கள் தனியார் தோட்டத்து வழியாகச் சாலையைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் இறந்தவரின் உடலைக் கொண்டு செல்ல தோட்டத்து உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததால் ஆம்புலன்சை ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் வர வைத்து இறந்தவரின் உடலை உறவினர்கள் கொண்டு சென்று அடக்கம் செய்யச் சென்றுள்ளனர்.
வழக்கமாக கொண்டு செல்லும் சாலையில் ஒன்றரை ஆண்டுகளாக சாலைப்பணி நடைபெறுவதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் குறைந்த தூரத்தில் எடுத்துச் செல்ல வேண்டியதால் தண்டவாளம் வழியாகக் கொண்டு சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சாலைப்பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.