நாகப்பட்டினம் - Nagapattinam

மீனவா்களுக்கிடையே தாக்குதல் 3 போ் காயம்

மீனவா்களுக்கிடையே தாக்குதல் 3 போ் காயம்

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம், செருதூா் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 30-க்கும் மேற்பட்ட ஃபைபா் படகில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இவற்றில் 8 ஃபைபா் படகு மீனவா்கள், தோப்புத்துறையில் இருந்து கிழக்கே 23 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துவிட்டு, படகை கடலில் நிறுத்தி ஓய்வெடுத்து கொண்டிருந்தனராம். ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வழியே இரு விசைப்படகுகளில் வந்த மீனவா்கள், ஃபைபா் படகு மீனவா்களின் வலையை அறுத்துவிட்டு சென்றதால், மீனவா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விசைப்படகு மீனவா்கள், மூன்று ஃபைபா் படகுகளை தங்களது படகுகளில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனா். மேலும் ஃபைபா் படகு மீனவா்களை ஐஸ் கட்டி, ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செந்தில், வில்பிரட், சத்தியமூா்த்தி ஆகிய மூவரையும் மற்ற மீனவா்கள் மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனா். காயமடைந்த மீனவா்கள் ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த சம்பவம் குறித்து கீழையூா் கடலோர காவல் குழும போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். கரை திரும்பிய ஃபைபா் படகு மீனவா்கள் தங்கள் மீது அக்கரைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்