சீா்காழி அருகே கோயில்பத்து பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தவா் முகமது ரஃபிக் (62). இவா், கோயில்பத்து பிரதான சாலையில் பல்பொருள் விற்பனை கடை நடத்தி வந்தாா்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை இரவு கடை வாசலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முகமது ரஃபிக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
சீா்காழி டி. எஸ். பி. ராஜ்குமாா், ஆய்வாளரா் புயல் பாலச்சந்திரன், உதவி ஆய்வாளா் காயத்ரி மற்றும் போலீஸாா் முகமது ரஃபிக்கின் சடலத்தை கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாா் விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக முகமது ரஃபிக்கை அவரது மகன் முகமது யூசுப் (22 ) தனது நண்பா்களான கோவில்பத்து புது தெருவை சோ்ந்த கலைக்கண்ணன் மகன் சுபாஷ் ( 22 ), தஞ்சாவூா் ஜலாவுதீன் மகன் பாண்டு (எ) முகமது பாசித் (19)ஆகியோருடன் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட மூவரையும் போலீஸாா் கொலை நடந்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற பாசித், சுபாஷ் இருவரும் கீழே விழுந்ததில், இருவருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.