சுனாமி குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கௌதமன் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், திமுக சார்பில் நிதி உதவியினை வழங்கினார்.
நாகப்பட்டினம் அடுத்த செல்லூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் கூலித்தொழிலாளி விஜயகுமார் என்பவரது வீட்டின் மேற்கூரை நேற்று முன்தினம்(செப்.19) இரவு பெயர்ந்து விழுந்ததில் அவரது 2 வயது மகன் யாசிந்த ராமன் பரிதாபமாக உயிரிழந்தார். விஜயகுமாரின் மனைவி படுகாயத்துடன் ஓரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இத்தகவலை அறிந்த நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கௌதமன் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் திமுக சார்பில் நிதி உதவியை குடும்பத்திற்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்று வீட்டின் தரம்குறித்து ஆய்வு செய்த கௌதமன், அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழுதடைந்த வீடுகளை இடித்து புதிய வீடுகள் கட்டித் தர தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.