கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் கல்வி ஞானம் வேண்டி வித்யா ஆரம்பம்
நன்னிலம் அருகே பூந்தோட்டம் கூத்தனூரில் கல்வி தெய்வமாம் சரஸ்வதிக்கு என தனியாக கோயில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு என தனியாக அமையப்பெற்ற ஆலயம் கூத்தனூரில் மட்டுமே உள்ளது. ஒட்டக்கூத்தன் என்னும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பெற்று ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கூத்தனூர் என்று பெயர் பெற்ற இந்த தளத்தில் விஜயதசமி அன்று "வித்யா ஆரம்பம்" செய்வது வழக்கம். சரஸ்வதி தேவியை விஜயதசமி அன்று எந்த வித்தைகளையும் கற்பதற்கு முன் இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கி சென்றால் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். அதன்படி குழந்தைகள் முதல் முதலில் பள்ளிக்குச் சேர்க்கும் போது கூத்தனூர் சரஸ்வதி அம்மன் ஆலயத்திற்கு அழைத்து வந்து குழந்தையின் நாக்கில் தேன் தொட்டு வைத்து, நெல்லில் அவர் அவர்களது தாய் மொழியில் ஓம் மற்றும் முதல் எழுத்தை எழுத வைத்து சரஸ்வதி தேவியை வழிபட்டால் குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி விஜயதசமி நாளான இன்று தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சிலேட்டு, பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் ஆகிய கல்வி உபகரணங்களை வாங்கி நீண்ட வரிசையில் நின்று சரஸ்வதி தேவிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு செல்கின்றனர்.