ஜன்னல் ஓரம் வைத்திருந்த லேப்டாப் திருட்டு: இருவர் கைது
ஆவடி சோரன்சேரி அசோக் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சதீஷ் கீழ் தளத்தில் உள்ள அறையில் ஜன்னல் அருகே லேப்டாப், பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை வைத்துவிட்டு மேல் தளத்திற்கு சென்று உறங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்து வேலைக்கு செல்ல தயாராகி, பொருட்களை பார்த்தபோது லேப்டாப் மற்றும் பர்சில் வைத்திருந்த ₹1000 பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக ஆவடி காவல் நிலையத்தில் சதீஸ் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஆவடி குற்ற பிரிவு ஆய்வாளர் ரமணி தலைமையில் சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், பூந்தமல்லி அருகே பதுங்கியிருந்த பட்டாபிராம் ஆயிலசேரியைச் சேர்ந்த சாரதி, ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த சந்துரு ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் காமராஜ் நகரை சேர்ந்த சந்துரு, ஆவடி சுற்று வட்டார பகுதிகளில், வழிப்பறி வீடுகளில் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளார். குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், அவர்களை கைது செய்து திருடு போன நகை, பணம், லேப்டாப், ஐ போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.