சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஒப்பந்தத்தின்படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்கி வருகிறது.
வடகிழக்கு பருவமழை போதிய மழைப்பொழிவு காரணமாக சென்னை குடிநீர் வழங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளிட்ட ஐந்து ஏரிகளில் போதிய அளவு நீர் இருந்ததால் முன்கூட்டியே இரண்டாம் கட்ட கால அளவுக்கு கிருஷ்ணா நதி நீர் சென்னை குடிநீர் தேவைக்காக பெற முடியவில்லை
இந்நிலையில் கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வெகுவாக நீர் இருப்பு குறைந்து வருவதால் ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்க வேண்டிய இரண்டாம் கட்ட 4 டி. எம். சி கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் எனக் கோரி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்பாசனத்துறை அதிகாரிகளுக்கு கடந்த மாதம் கடிதம் எழுதிருந்தனர்.
அதன்பேரில் இன்றைய தினம் கண்டலேறு அணையில் கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு முதல் கட்டமாக 500 கன அடி விதம் சென்னை குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 500 கன அடி வீதம் நீரானது 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அடுத்த நான்கு நாட்கள் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயிண்டுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது,