
தேனி அருகே துணிகரம்.. நகை பணம் திருட்டு
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (42 வயது) கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் வழக்கம்போல் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பி வந்து பார்த்தபொழுது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த நாகராஜன் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் கெங்குவார்பட்டி அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்த இந்திரா என்பவர் நேற்று மாட்டிற்குப் புல் அறுக்கச் சென்றபோது, வீட்டில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.