
பேராவூரணி அரசு கல்லூரியில் பட்டமேற்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமேற்பு விழா சனிக்கிழமை கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை. செழியன் இளங்கலை மாணவ, மாணவிகள் 299 பேர், முதுகலை மாணவ, மாணவிகள் 17 பேர் என மொத்தம் 316 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது, "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற காலம் போய், இன்றைக்கு நாங்களும் படிக்கிறோம். நாங்களும் வேலைக்கு செல்கிறோம் என்ற நிலை வந்திருக்கிறது. அதனை உற்சாகப்படுத்தக்கூடிய முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கின்றனர். நீங்கள் பெற்ற உங்கள் கல்வியை, நாட்டுக்கும், வீட்டிற்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஒரு தேசம் முன்னேறும்" என்று பேசினார். விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் நா. அசோக்குமார் (பேராவூரணி), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் ரோசி, கல்லூரி முதல்வர் முனைவர் இரா. திருமலைச்சாமி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.