
தஞ்சை: வறுமையில் வாடும் மாணவி; தேடி வந்து உதவி செய்த எம். பி முரசொலி
தஞ்சை மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (45), இவரது மனைவி ராக்கம்மாள் 9 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவர்களுக்கு சித்துக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் நித்தியஸ்ரீ (14) என்ற மகளும், 7ஆம் வகுப்பு பயிலும் ஹரிஹரசுதன் (12) என்ற மகனும் உள்ளனர். ரங்கசாமிக்கு விபத்து ஒன்றில் வலதுகால் பாதிக்கப்பட்டுள்ளது. நூறுநாள் வேலையில் வரும் வருமானத்தைக் கொண்டு தாயில்லாத தனது குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார். தனது துயரத்தை மாணவிசமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த நிலையில், தகவல் அறிந்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி வெள்ளிக்கிழமை சித்துக்காட்டில் உள்ள மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்து மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கியும், நிதியுதவியும் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, விரைவில் வீட்டிற்கு மின் இணைப்பு கிடைத்திடவும், மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதி அளித்தார். மேலும், மாணவி கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான புதிய சைக்கிளையும் உடனடியாக வழங்கினார். உதவிகளைச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலிக்கு மாணவி நித்தியஸ்ரீ, அவரது தம்பி ஹரிஹரசுதன் ஆகியோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.