பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்

62பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நடைபெற்ற குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பேராவூரணியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 23 ஆம் ஆண்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் இன்று நடைபெற்றது. திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் பேராவூரணி ஸ்ரீ பிள்ளையார் நண்பர்கள் இணைந்து நடத்திய போட்டியில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, நடுக்குதிரை, புதுப்பூட்டு குதிரை என பல்வேறு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

 போட்டியை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார் (பேராவூரணி), துரை. சந்திரசேகரன் (திருவையாறு), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

 போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு மொத்தம் சுமார் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. எல்கையை நோக்கிச் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பந்தயத்தை, சாலையின் இருபுறமும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி