தஞ்சாவூர்: விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு மறியல்

57பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள விளங்குளம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ரமேஷ் (வயது 42) இவரது மனைவி புனிதா (வயது 35) இவர்களுக்கு கனிஷ்கா என்ற ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மகளும், அனுஷ்கா என்ற ஏழாவது வகுப்பு படிக்கும் மகளும், ஹர்ஷிகா என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் தனது பைக்கில் விளங்குளம் சென்று கொண்டிருந்தார். அப்போது செந்தலைப்பட்டினம் என்ற ஊரில் பைக்கில் வந்த அசாருதீன் வந்த வாகனம் நேருக்கு நேர் மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார். அவரது சடலம் உடற்கூறாய்வு முடிந்து இன்று சொந்த ஊர் கொண்டு வரப்படும் வழியில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் ரமேஷ் உடல் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து நிறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரமேசின் மனைவி, மூன்று பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். 

உரிய நிவாரணம், ரமேஷின் மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமார் 2 மணி நேர சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது

தொடர்புடைய செய்தி