
தஞ்சாவூர்: ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தான் நடத்த முடியும் - அமைச்சர்
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய தலைவர் சிவ. வீ. மெய்யநாதன் தலைமையில், 15 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 15 மாவட்டங்களில், 50 ஆயிரமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டில், 15 மாவட்டங்களில் 2017 சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதில் 10 ஆயிரம் பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தான் நடத்த வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தின் மூலம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும். மாநில அரசு எடுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்புகளை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. நீதிமன்றங்கள் அந்த மாதிரி எடுக்கப்படுகின்ற கணக்கெடுப்பு தள்ளுபடி செய்கின்றன என்று அவர் கூறினார்.