தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மின்னல் தாக்கி காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழுமங்குடா கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கார்மேகம், இவரது மகன்கள் பிரபாகரன் (வயது 38), காளிதாஸ் (வயது 35) இருவரும் வெள்ளிக்கிழமை இரவு 10: 30 மணிக்கு சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து, ஐந்து நாட்டிகல் கடல் மைல் தூரத்தில், தங்களுக்கு சொந்தமான ஃபைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து மின்னல் தாக்கியது. இதில் காளிதாசுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது அண்ணன் பிரபாகரன் படகை கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.