வால்பாறை: மாட்டுத் தொழுவமாக மாறி வரும் பேருந்து நிலையம்
கோவை மாவட்டம் வால்பாறையில் புதிய பேருந்து நிலையம் பாழடைந்து வருவதாகவும், இரவு நேரங்களில் மாட்டுத் தொழுவமாக மாறி வருவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை பணிமனைகளில் இருந்து எஸ்டேட் பகுதிகள், பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம் ஆகிய பகுதிகளுக்கு சுமார் 40 பேருந்துகள் இயங்கி வருகின்றன. வால்பாறையில் புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை பேருந்து நிலையம், அக்கா மலை பேருந்து நிலையம் என மூன்று பகுதிகளாக பிரித்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய பேருந்து நிலையம் மற்றும் பணிமனை பகுதி ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கான பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. பயணிகள் இருக்கைகள், கழிப்பிட வசதி போன்ற அனைத்து வசதிகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தன. ஆனால் தற்போது, இந்த பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக பேருந்துகளை நிறுத்தாததால் பேருந்து நிலையம் பாழடைந்து வருகிறது. இரவு நேரங்களில் கால்நடைகள் பயன்படுத்தும் மாட்டுத் தொழுவமாக முற்றிலும் மாறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.