கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். 108 வயது வரை தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த பாப்பம்மாளுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது. பாப்பம்மாளின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பாப்பம்மாளின் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் பாப்பம்மாள் பெண்களின் அடையாளமாகவும், கோவையின் அடையாளமாகவும் திகழ்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மதிப்புக்குரியவராக இருந்தார். பிரதமர் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவார் என்று கூறினார். பாப்பம்மாளின் ஆத்மா சாந்தியடைய பாஜக சார்பில் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.