பொள்ளாச்சி உட்கோட்ட காவல்துறைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏ. எஸ். பி. கிருஸ்டி சிங், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் கள்ளு இறக்கப்படுகிறதா என ஆய்வு செய்து, கள்ளு இறக்கும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நாராயணசாமி விவசாய சங்கம் சார்பில் அதன் கொள்கை பரப்புச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த ஏ. எஸ். பி. , விவசாயிகளை சந்திக்க முயன்ற போது, சிறிது வேலை இருப்பதாக கூறி வாகனத்தில் ஏறி சென்று விட்டார். இந்த நிலையில், ஏ. எஸ். பி. வரும் வரை டிஎஸ்பி அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருந்து வருகின்றனர். தமிழகத்தில் உடலை பாதிக்கக்கூடிய மது விற்பனை செய்யப்பட்டு வருவதால், முதலில் சம்பந்தப்பட்ட அமைச்சரையும், முதலமைச்சரையும் கைது செய்துவிட்டு பின்னர் கள்ளு இறக்கும் விவசாயிகளை கைது செய்யட்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.