

கோவை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி!
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை, கோவை மாவட்ட காவல் துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், கே. ஜி. சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்து அறநிலையத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிசங்கர் (42) என்பவரிடம் ரூ. 5, 40, 000/- கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட கோபிசங்கர், பின்னர் அந்த பெண்ணை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோபிசங்கர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோன்ற நூதன மோசடிகளில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.