ஜார்கண்ட் மாநிலம் கோன்டா பகுதியைச் சேர்ந்த அனுல் அன்சாரி என்பவர் தனது இரண்டு மனைவிகள் மற்றும் மூன்று குழந்தைகளுடன் தேயிலை பறிக்கும் வேலைக்காக ஊசிமலை எஸ்டேட் பகுதிக்கு வந்திருந்தார். நேற்று அந்தப் பகுதியில் ஒருவர் இயற்கை மரணம் அடைந்ததால் அனைவரும் வீட்டில் இருந்தனர். இந்நிலையில், அனுல் அன்சாரி, அவரது மனைவி நசிரென் காத்துன் மற்றும் அவர்களின் 4 வயது மகள் அப்சரா காத்துன் ஆகியோர் தேயிலை தோட்டத்தில் நின்றிருந்தனர். திடீரென ஒரு சிறுத்தை அப்சரா காத்துனை தாக்கி இழுத்துச் சென்றது. இதைக் கண்ட மக்கள் சிறுத்தையை விரட்டினர். சிறுத்தை குழந்தையை தேயிலை தோட்டத்தில் விட்டுவிட்டு ஓடிவிட்டது. ஆனால் அதற்குள் குழந்தை உயிரிழந்துவிட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நகராட்சித் தலைவர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தையின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். மேலும் தேயிலை தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.