வால்பாறை பகுதியில் உள்ள சாலைகள் குறுகலானவை. காமராஜர் நகர் முதல் புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. ஒவ்வொரு வாகனமும் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் சாலைகளில் நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதை பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சினை குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அலைந்து திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாலைகளில் மாடுகளை விடுவதை தடுக்கவும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.