உதகையில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை...
உதகையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இறந்தவர்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நாளில் இறந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். கல்லறை திருநாளையொட்டி உதகை மேரீஸ்ஹில் புனித மரியன்னை ஆலயத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லறை தோட்டத்தில் கல்லறை அர்ச்சிக்கும் நிகழ்ச்சி ஆயர் தலைமையில் நடைபெற்றது. மேலும் காந்தல் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த உறவினர்கள் மற்றும் முன்னோர்களது கல்லறைகளுக்கு சென்று இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையில் மலர்கள், மெழுகுவர்த்திகள் வைத்து அலங்கரித்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடியும், பிரார்த்தனை செய்தும் தங்களது குடும்பத்தினருடன் இறந்தவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தினர்.