செந்தறை: பயணிகள் நிழற்குடை திறந்து வைத்த எம்.எல்.ஏ
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி , கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட செந்தறை ஜங்சனில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக ராஜேஷ் குமார் எம். எல். ஏ. விடம் கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் பொதுமக்கள் நலன் கருதி மின் விளக்குகளுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்க தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் முடிவடைந்ததையடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று (24-ம் தேதி) நடைபெற்றது. ராஜேஷ்குமார் எம் எல் ஏ திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜகிளன், பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோபால் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.