குமரி: கண்டக்டர் சென்னையில் கொலை: உடல் இன்று ஊரில் அடக்கம்
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கீழ்குளம் அருகே பரவை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் குமார் (49). இவர், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் நடத்துநராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜெகன் குமார் பணியில் இருந்தார். அப்போது, மதுபோதையில் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் டிக்கெட் எடுக்குமாறு ஜெகன் குமார் கேட்டுள்ளார். இதனால் ஜெகன் குமாருக்கும், போதை ஆசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஜெகன் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த பயணிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அமைந்தகரை போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி, போதை ஆசாமி கோவிந்தன் மீது கொலை வழக்கு பதிந்து, அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். பலியான குமாருக்கு சோணா என்ற மனைவி மற்றும் ஹாசிகா , ஷீனா ஜெசிலின் என 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் 10ம் வகுப்பும், இளையமகள் 8ம் வகுப்பும் பயின்று வருகின்றனர். ஜெகன் குமாரின் உடல் இன்று (26. ம் தேதி) காலை சொந்த ஊரான புதுக்கடை அருகே பரவை கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.